டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கின்றன என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? இது தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.
நிச்சயமாக யோசித்திருப்பீர்கள். ஏனென்றால் உலகில் இயங்கும் அனைத்து வாகனங்களின் டயர்களும் ஏறக்குறைய கருப்பு நிறத்தில்தான் இருக்கும். கார், டூவீலர், லாரி மற்றும் பஸ் என எந்த வகையான வாகனமும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. அவ்வளவு ஏன்? சைக்கிள் டயரும் கூட கருப்பு வண்ணத்தில்தானே இருக்கிறது.
எனவே வாகனங்களின் டயர்கள் ஏன் கருப்பு வண்ணத்தில் இருக்கின்றன? என உங்களில் பலர் நிச்சயமாக யோசித்திருப்பீர்கள். இன்னும் சிலருக்கு அட ஆமா ஏன் டயர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன? என்ற சந்தேகம் தற்போது புதிதாக எழும்பியிருக்கும். உங்களின் இந்த சந்தேகத்திற்கு இந்த செய்தியில் விடை அளித்துள்ளோம்.
ஒரு விஷயம் தெரிந்தால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். கடந்த 1895ம் ஆண்டுதான் முதல் டயர் உருவாக்கப்பட்டது. இது வெள்ளை நிறத்தில்தான் இருந்தது. ஏனெனில் தூய்மையான ரப்பரால் இது உருவாக்கப்பட்டது. பால் போன்ற வெள்ளை நிறம்தான் (Milky White) ரப்பரின் இயற்கையான வண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே முதல் டயர் வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆனால் வெள்ளை நிற டயர்களால் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டன. வெள்ளை நிற டயர்கள் நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கவில்லை. அத்துடன் அவை திடமாகவும் இல்லை. இதுமட்டுமல்லாது வெப்பத்தை எதிர்க்கும் திறனும் அவற்றுக்கு மிகவும் குறைவாகவே இருந்தது.
போதாக்குறைக்கு 'க்ரிப்பிங்' திறனிலும் அவை சொதப்பின. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அவற்றின் வாழ்நாள் மிகவும் குறைவாகவே இருந்தது. அதாவது 100 கிலோ மீட்டர்கள் முதல் 200 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே அவற்றின் ஆயுட்காலம். ஆனால் இன்றைய நவீன கால டயர்கள் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாதவையாக உள்ளன.
நவீன கால டயர்கள் அனைத்தும் கடினமாக உள்ளன. நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கின்றன. மிகவும் திடமாகவும் இருக்கின்றன. அத்துடன் வெப்பத்தையும் நன்கு தாங்குகின்றன. ஒட்டுமொத்தத்தில் அவை வலுவாக உள்ளன. மழையாலும் அவை பாதிக்கப்படுவதில்லை. அத்துடன் சாலைகளில் நமக்கு நல்ல 'க்ரிப்பை' அவை வழங்குகின்றன.
கார்பன் பிளாக் (CARBON BLACK) என்ற வேதி சேர்மத்தை தூய்மையான ரப்பருடன் கலப்பதால்தான் நமக்கு இவ்வாறான அருமையான டயர்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாகதான் டயர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. அதாவது வல்கனைசேஷன் (Vulcanization) செயல்முறையின் போது, சல்பருடன் சேர்த்து கார்பன் பிளாக் தூய ரப்பருடன் கலக்கப்படும்.
இதன் மூலம் ரப்பரின் மூலக்கூறு பிணைப்பு நன்கு வலுவாகும். சரி, ரப்பருடன் கார்பன் பிளாக்கை சேர்ப்பது ஏன்? என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு எழலாம். வேறு எந்த மெட்டீரியலை காட்டிலும் கார்பன் பிளாக் மலிவானது. இதன் காரணமாகதான் கார்பன் பிளாக் சேர்க்கப்படுகிறது. அத்துடன் வேறு எந்த நிறத்தை காட்டிலும் கருப்பு வண்ணம்தான் டயர்களுக்கு அதிக நன்மையை பயக்கும்.
கருப்பு வண்ணம் காரணமாக டயர்கள் விரைவாக சேதமடைவதும் தவிர்க்கப்படுகிறது. இதுபோல் பல்வேறு நன்மைகள் கிடைப்பதன் காரணமாகதான் நாம் கருப்பு வண்ண டயர்களுக்கு மாறி விட்டோம். அதற்காக உலகில் வேறு எந்த வண்ணத்திலும் டயர்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது இதற்கு அர்த்தம் கிடையாது.
கருப்பு வண்ண டயர்கள்தான் உலகில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அவைதான் பிரபலமாகவும் உள்ளன. கலர்புல் டயர்களுடன் கூடிய கார்களும் கூட இருக்கலாம். ஆனால் தினசரி ஓட்டுவதற்கு உகந்ததாக அவை இருக்காது.
No comments:
Post a Comment